ஞாயிறு, 19 மே, 2013

மூலிகை பண்ணை

் மூலிகை பண்ணை
மருத்துவ குணம் கொண்ட மூலிகைத் தாவரங்களை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட புல்லேரி மூலிகைப் பண்ணை பராமரிப்பில்லாததால் சமூக விரோதிகளின் கூடாரமாகவும், மேய்ச்சல் நிலமாகவும் மாறியுள்ளது.

இயற்கையாக மூலிகை செடிகள் வளர்ந்துள்ள காடு மற்றும் மலைப்பகுதி "மருத்துவ செடிகளின் பாதுகாப்புப் பகுதி (மெடிசினல் பிளாண்ட் கன்சர்வேஷன் ஏரியா)' மருத்துவ செடிகளை உருவாக்கி பாதுகாக்கும் பகுதி, "மருத்துவ செடிகள் மேம்பாடு பகுதி (மெடிசினல் பிளாண்ட் டெவலப்மென்ட் ஏஜன்சி)' என, இரண்டு வகை மூலிகைப் பண்ணைகள் ஏற்படுத்தப்பட்டது. மருத்துவ செடிகளின் பாதுகாப்புப் பகுதிகளாக பேச்சிப்பாறை, முண்டந்துறை, களக்காடு நம்பிகோவில், குற்றாலம், தானிப்பாறை, அழகர்கோவில், கொடைக்கானல், கோடியக்கரை, பொள்ளாச்சி டாப்சிலிப், கொல்லிமலை, தென்மலை, விழுப்புரம் குரும்பரம், முதுமலை ஆகியவை அமைந்துள்ளன. மருத்துவ செடி மேம்பாட்டுப் பகுதிகளாக மணி விழுந்தான், டானிஷ்பேட்டை (சேலம்), தோப்பூர் (தர்மபுரி), மருதமலை(கோயம்புத்தூர்), தொட்டபெட்டா (நீலகிரி ), பூச்சம்பட்டி (மதுரை), புல்லேரி (காஞ்சிபுரம்), ஆற்கோட்டா குடிசை (வேலூர்) ஆகிய இடங்களில் மூலிகைப் பண்ணைகள் ஏற்படுத்தப்பட்டது.

புல்லேரி மூலிகைப் பண்ணை: காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் 1997ம் ஆண்டு புல்லேரி மூலிகைப் பண்ணை ஆரம்பிக்கப்பட்டது. புல்லேரி கிராமத்தில் ஆறு ஏக்கர், தண்டரை கிராமத்தில் 196 ஏக்கர் என மொத்தம் 202 ஏக்கர் பரப்பளவில் பண்ணை உருவாக்கப்பட்டது. இப்பண்ணையில் வில்வம், தானி, நாவல், மலை வேம்பு, வேம்பு, பெருநெல்லி, வாதநாராயணன், மூங்கில், புளி, புங்கன், இலுப்பை, நீர் மருது, திரிபலா, ஆயா, சீமை கொருக்காபுள்ளி, பூவரசன், தேன்கிட்டு, நீலகிரி, ஆலன், அரசன், கொருக்காபுளி, இலந்தை, சிறியாநங்கை, சிறுகுறிஞ்சான், வல்லாரை, , தூதுவலை, ஞானகுண்டுமணி, வசம்பு, பொன்னாங்கன்னி, வெல்வேலன், கருவேலன், ஊமத்தை, கருநொச்சி, கீழாநெல்லி, கருந்துளசி, சீதா துளசி, மல்லி, முல்லை, சித்தரட்டை, செம்பருத்தி, இஞ்சி, யானை குண்டுமணி, ஆடுதொடா, மருதாணி, நாயுருவி, தொட்டாச்சிணுங்கி, நிலவேம்பு, அவுரி, சீத்தனாங்கொடி, தும்பை, வேலகீரை, அருகம்புல், ஆமணக்கு, வெள்ளை அருக்கன், நொனா, நாகமணி, பெரண்டை, ஆவாரம், கற்பூரவள்ளி, சோற்றுக் கற்றாழை, நார் கற்றாழை, சப்பாத்தி என செடி, கொடி, மரம் வகைகளைச் சேர்ந்த மூலிகைத் தாவரங்கள் வளர்க்கப்பட்டன.

சமூக விரோதிகளின் கூடாரம்: மூலிகைப் பண்ணையை பாதுகாக்க சுற்றிலும் கம்பிவேலி அமைக்கப்பட்டது. மூலிகை தாவரங்களை வளர்த்து பொதுமக்களுக்கு விற்கவும் செய்தனர். நாளடைவில் முறையாக பராமரிப்பின்றி தாவரங்களின் எண்ணிக்கை குறைந்தது. பண்ணையிலிருந்த மின் மோட்டார், மற்றும் கருவிகள், பண்ணையைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த கம்பிவேலி மாயமானது. பாதுகாப்பில்லாத பண்ணை தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. குடிமகன்கள் திறந்த வெளி பாராக பயன்படுத்துவதால், பண்ணை உள்ளே மதுபாட்டில்கள், தண்ணீர் பாக்கெட், குளிர்பானப் பாட்டில்கள் சிதறிக் கிடக்கின்றன. சிலர் பெண்களையும் அழைத்து வந்து உல்லாசமாக இருந்துவிட்டு செல்கின்றனர். பண்ணையில் பெரும்பாலான மூலிகை தாவரங்கள் மாயமாகிவிட்டன. மீதமுள்ள சில செடிகளை பாதுகாக்க அரசும், வனத்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேய்ச்சல் நிலமான பண்ணை: மூலிகைப் பண்ணையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், அப்பகுதியில் கால்நடை வளர்ப்போர், தங்கள் கால்நடைகளை பண்ணைக்குள் மேய்க்காமலிருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வனக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, அவர்கள் மாற்றுத் தொழில் செய்ய கடனுதவி வழங்கப்பட்டது. நாளடைவில், போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததாலும், பாதுகாப்பின்மையாலும் பண்ணை சீரழிய துவங்கியது. தற்போது ஏராளமான கால்நடைகள் பண்ணைக்குள் மேய்ந்து மூலிகைகளை அழித்து வருகின்றன.

சுவையான மூலிகை டீ: புல்லேரி மூலிகைப்பண்ணை துவக்கப்பட்ட போது, அங்கு வளர்ந்த துளசி, சித்தரட்டை, செம்பருத்தி, இஞ்சி, நன்னாரிவேர், வெற்றிவேர் ஆகியவற்றை காய வைத்து, டீத்தூள் தயாரித்து மூலிகை டீ விற்றனர். மூலிகைப் பண்ணையை கடந்து செல்வோர், இயற்கையான சூழலில் அமர்ந்து சுவையான மூலிகை டீயை அருந்திவிட்டு சென்றனர். மீண்டும் மூலிகை டீ விற்பனையை துவக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

1 கருத்துகள்:

29 டிசம்பர், 2015 அன்று 9:58 PM க்கு, Blogger Unknown கூறியது…

என் பெயர் ஜெயராமன்,நான் காஞ்சிபுரத்தில் வசிக்கிறேன்.எனக்கு 3 ஏக்கர் நிலம் உள்ளது அதில் என்னமாதிரியான மூலிகை பயிர் செய்யலாம்?

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு